Snapped: 41 - Placard Holding Tamil Girl in front of Indian Embassy in Norway

Original photo & news are from puthiam.com
இந்திய தூதரகம் முன்பாக நோர்வே தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
[வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:54 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]
சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்புப் போரினைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் முகமாக நோர்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
போர் நிறுத்தம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்பினை நிறுத்திட இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கவனயீர்ப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பாக வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கப்பட்டு, உடனடி போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை மனு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூதரகம் ஊடாக கையளிக்கப்பட்டது.
அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிங்கள அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்புப் போரினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய, தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைவாகவும், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தங்களை புதுடில்லியில் சந்தித்த்து, உடனடிப் பேச்சுவார்த்தை தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது விடயம் தொடர்பாக தங்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனபோதும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினை நிறுத்துவதறகான எதுவிட நடவடிக்கைகளையும் தங்கள் அரசு இதுவரை எடுக்கவில்லை. தாங்கள் உறுதியளித்தமைக்கு அமைவாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்காவுக்கு அனுப்பப்படவில்லை.
இன்றைய சூழலில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் வான்வெளித் தாக்குதல்கள், ஆட்லறி, பீரங்கிகள், அதி நவீன பல்குழல் ஆயுதங்களால் தமிழர் வாழ்விடங்களை நோக்கி பாரிய தாக்குதல்களை சிங்கள அரச இயந்திரம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
திட்டமிட்ட முறையில் அப்பாவிப் பொதுமக்களே நாளாந்தம் படுகொலை செய்யப்படுகின்றனர். 2 லட்சத்து 70 ஆயிரம் வரையான மக்கள் வன்னியின் ஏனைய பகுதிகளிலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள், ஏலவே பல தடவைகள் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்தவர்கள்.
ஈழத் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக, புவியியல் ரீதியாக, பண்பாட்டு வாழ்வியல் ரீதியாக இந்திய தேசத்தின் உண்மையான நண்பர்கள் என்பதையும், இந்தியாவின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதையும் இந்திய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவேண்டும்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமென தமிழக மக்களையும் உரிமையோடு நோர்வே வாழ் தமிழ் மக்கள் வேண்டி நிற்பதாகவும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home